கிராமங்களில் இன்று செவ்வாய்கிழமை இராணுவம் , கடற்படை மற்றும்
காவல்துறை இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். அந்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை ரி- 56 ரக
துப்பாக்கி மீட்பு மற்றும் சந்தேகத்திற்குரிய இருவரது நடமாட்டம் அவதானிக்கப்பட்டதையடுத்தே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஈச்சிலம்பத்தை பிரதேசத்திலுள்ள கடலோர கிராமங்களான வாழைத்தோட்டம் , புண்ணையடி ,
முட்டுச்சேனை ,கல்லடீ மற்றும் இலங்கைத்துறை ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக இந்த தேடுதல் இடம் பெற்றதாக பிரதேச தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. அதிகாலை 4 மணி தொடக்கம் காலை 6 மணி வரை தங்கள் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை அந்த பகுதியிலுள்ள வழிபாட்டு தலமொன்றில் கூடுமாறு பாதுகனாப்பு தரப்பினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பிட்ட இடத்தில் கூடிய பொது மக்களிடம் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டங்கள் தொடர்பில் விழிப்பாக இருப்பதோடு தகவல் தர வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தி கூறப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றார். கிராமங்களை விட்டு எவரும்
வெளியிடங்களுக்கு செல்வதற்கு கூட
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையினால் நண்பகல் வரை பிரதேசத்தின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. அதேவேளை இந்த
பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவலில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில்
லங்கா பட்டுனா (இலங்கைத்துறை முகத்துவாரம்) கடற்படை முகாம்க்கு அருகாமையில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளும் பையொன்றில் போடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கடற்படை வீரர்கள் நடைப்பயிற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை சந்தேகத்திற்கிடமான இருவரது நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டு அவர்களை கடற்படை நெருக்க முற்பட்ட வேளை தம்வசம் வைத்திருந்த பையொன்றை வீசி விட்டு தப்பிச் ஒடி விட்டனர்.
அந்த பையிலே குறித்த ரி –56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் கண்டு பிடிக்கப்பட்டது இதனையடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை என கூறப்பட்டுள்ளது. போருக்கு முன்னர் ஈச்சிலம்பத்தை பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த
பிரதேசமாகும். போருக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட
முதலாவது சுற்றிவளைப்பு தேடுதல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


