Headlines News :
Home » » கடலில் கடற்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தியின் பாகங்கள் மீட்பு!

கடலில் கடற்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தியின் பாகங்கள் மீட்பு!

முல்லைத்தீவு பகுதியில் இறுதிகட்ட போர் காலத்தில் கடற்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி ஒன்றின் பாகங்களை சிறிலங்கா கடற்படை இன்று மீட்டெடுத்திருக்கின்றது.
முல்லைத்தீவு சாலை கடற்பரப்பில் இருந்தே இந்த பாகங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சாலை கடலோரத்தில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளம் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தி கடற்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இந்த உலங்குவானூர்தி சாலைக் கடலுக்குள் வீழ்ந்ததுடன் அதில் இருந்த விமானி உட்பட படையினர் அனைவரும் பலியாகியிருந்தனர். இந்த உலங்குவானூர்தியின் பாகங்களையே இன்று சிறிலங்கா கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, வட பிராந்திய கடற்படை தளத்தைச் சேர்ந்த கடற்படை சுழியோடிகளும் கடற்படைக்குச் சொந்தமான 'ரணகஜ' கப்பலையும் பயன்படுத்தியே ஹெலிகொப்டரின் பாகங்களை மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

மீட்டெடுக்கப்பட்ட பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசந்துறை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படைப் போச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், கடற்படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ள பாகங்கள் ஹெலிகொப்டரினது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன இந்த ஹெலிகொப்டர் யாருக்கு சொந்தமானது மற்றும் எப்போது விழுந்தது என்பன தொடர்பில் விரிவாக ஆராயும் பொருட்டு விமானப் படையின் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரி ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றார்.

இந்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை மறைப்பதற்காக அது விபத்தினால் விழுந்தது என்றும் சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Share this article :

Banner Ads

Friends Site