தமிழ் தேசிய மே நாளின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான எழுச்சி நிகழ்வு கிளிநொச்சி அக்கராயன் ஸ்கந்தபுரம் பிரதேசசபை வளாகத்தில் பிரதேசசபை உறுப்பினர் தயாபரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
முன்னதாக உழைப்பால் ஒன்றிணைவோம் எம்மண்ணில் நிலைபெறுவோம் என்ற மகுடத்தின் கீழ் அக்கராயன் இத்தியடி அம்மன் ஆலய முன்றலில் இருந்து ஊர்திகள் சகிதம் ஆரம்பமான மேநாள் நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் வடமாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள்
 பெண்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் விவசாய பெருமக்கள் என திரளாக கலந்துகொண்டனர்.
பின்னர் மேநாள் மேடையில் மக்கள் பிரதிநிதிகள் பலரும் சிறிப்புரைகளை ஆற்றியிருந்தனர்.
இதில் உழைப்பாளர் பெருமக்களுக்கு மதிப்பளித்து வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் உரை நிகழ்த்துகையில்,
மிகவும் அழுத்தமான சூழலில் எமது மக்கள் இங்கு திரண்டிருப்பதை பார்க்கும் பொழுது நம்பிக்கை முறுக்கேறுகின்றது. வன்னி மண்ணில் இன்னும் அடங்காத் தமிழர்களை பார்க்க முடிகின்றது.
இந்த மே நாள் போரை அல்ல எமது சுதந்திரத்துக்கான போராட்டம் தொடரும் என்பதை அறிவிக்கின்றது. நாம் முப்பது வருடங்களாக ஏரும் போருமான வாழ்வையே கைக்கொண்டவர்கள். இன்றைக்கும் அதுவே தொடர்கின்றது.
உலகில் அடக்குமுறைகள் நிலைத்ததாக வரலாறுகள் ஒருபோதும் இல்லை. எனவே இலங்கையில் தமிழர்களாகிய எம்மீது மகிந்த அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு நிச்சயம் முடிவுகாலம் உண்டு.
இன்று இந்த தொழிலாளர் தினத்தை மகிந்த அரசாங்கம் கொண்டாடுகின்றது. ஆனால் அதை கொண்டாட இந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஒரு துளி தகுதியும் இல்லை.
எமது மக்களை இரத்த சகதியில் தள்ளி கொன்று குவித்து அவர்களை சிறையில் அடைத்து அவர்களின் காணி நிலங்களை பறித்தெடுத்து விட்;டு நீல வர்ணத்துக்குள் புகுந்து கொண்டு எப்படி மகிந்த அரசாங்கம் மேதினத்தை கொண்டாட முடியும்.
வலிவடக்கில் எமது உழைப்பாளர்களான விவசாயிகளின் நிலத்தை பறித்தெடுத்துள்ளது. முத்தையன்கட்டு குளத்தின் கீழான எமது விவசாயிகளின் நிலத்தில் இராணுவம் விவசாயம் செய்து எமது விவசாயிகளின் சந்தை வாய்ப்புக்களை இல்லாது செய்கின்றது.
போரின்போது தவறவிடப்பட்ட எமது விவசாயிகளின் பசுமாடுகளில் இராணுவம் பால் கறந்து அதை பதனிட்டு யோகட் தயாரித்து எமது விவசாயிகளுக்கே விற்கின்ற சீரழிவை எமது நிலத்தில் இலங்கை அரசாங்கம் செய்கின்றது என அமைச்சர் ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.







