Headlines News :
Home » , » சினிமா >> விமர்சனம் வடகறி

சினிமா >> விமர்சனம் வடகறி

நடிகர் : ஜெய்நடிகை : சுவாதிஇயக்குனர் : சரவணராஜன்இசை : விவேக் ஷிவா, மெர்வின் சாலமன்ஓளிப்பதிவு : எஸ்.வெங்கடேஷ்
சென்னையின் குடிசைப் பகுதியில் தனது அண்ணன் அருள்தாஸ், அண்ணி கஸ்தூரி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் ஜெய். இவருக்கு மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை கிடைக்கிறது. சாதாரண செல்போனை வைத்திருக்கும் ஜெய், தனக்கு வேலை கிடைத்துவிட்டதால், முதல் சம்பளத்தில் நல்ல செல்போனாக வாங்கவேண்டும் என்று திட்டம் போடுகிறார். 

முதல் மாத சம்பளத்தை வாங்கி, தனது அண்ணனிடம் கொடுக்கிறார். அவரோ, ஜெய்யிடம் வெறும் ரூ.2000 மட்டுமே கொடுக்கிறார். அதை வைத்து பெரிய போனை வாங்க முடியாது என்பதால் குறைந்த விலையில் ஒரு கொரியன் மொபைலை வாங்கிக் கொள்கிறார். 

அந்த மொபைலுக்கு அழைப்புகள் வரும்போதெல்லாம் அதிக சத்தத்துடன் வருவதால் இவரை சுற்றியுள்ளர்கள் இவர்மீது எரிச்சலடைகின்றனர். அதனால், அந்த போனை எப்படியாவது மாற்றவேண்டும் என்று முடிவு செய்கிறார். 

இதற்கிடையில், ஜெய்யின் நண்பன் பாலாஜி குடியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் தோழியின் வீட்டுக்கு வரும் சுவாதியை அந்த ஏரியாவில் உள்ள அனைவருமே ஜொள் விடுகின்றனர். ஒருநாள் பாலாஜி வீட்டிற்கு செல்லும் ஜெய்யும், சுவாதியை பார்த்தவுடனேயே காதலில் விழுகிறான். 

ஆனால், அவளுக்கு வேறொரு காதலன் இருக்கிறான், அதனால் அவளது தோழியை காதலிக்குமாறு அறிவுரை கூறுகிறான் பாலாஜி. அதை ஏற்றுக்கொள்ளும் ஜெய், சுவாதியின் தோழியை ரூட் விடுகிறார். 

இந்நிலையில், ஒருநாள் கடைக்கு செல்லும் ஜெய், அங்கு விலையுயர்ந்த செல்போன் ஒன்று அனாதையாக இருப்பதை பார்க்கிறார். அதைப் பார்த்ததும் எடுத்து வைத்துக் கொள்கிறார் ஜெய். 

ஒருநாள், சுவாதியின் தோழியிடம் சென்று தனது காதலை சொல்லப்போகும் ஜெய், அவள் மூலமாக சுவாதிக்கு காதலன் இல்லை என்பதை அறிகிறான். உடனே, சுவாதியை காதலிப்பதாக அவளது தோழியிடமே சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். கோபமடைந்த தோழி, சுவாதியிடம் சென்று சண்டை போடுகிறாள். இந்த சண்டையால் வெறுப்படைந்த சுவாதி, தோழியை கடுப்பேத்துவதற்காக ஜெய்யிடம் நெருங்கி பழகுகிறார். நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் வருகிறது. 

இந்நிலையில் ஜெய் கண்டெடுத்த போனுக்கு ஒரு நபர் போன் செய்து, கொடுத்த சரக்கை எப்ப வந்து ஒப்படைப்பாய்? சீக்கிரம் வந்து கொடுத்துவிடு என்று சொல்லிவிட்டு கட் செய்துவிடுகிறார். யார் அவர்? என்ன சரக்கு? என்று எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் ஜெய். 

இதற்கிடையில் அவரது அண்ணனின் நேர்மையை அறியும் ஜெய், தானும் அதேபோல் இருக்க நினைக்கிறார். அதனால், அந்த மொபைல் போனை உரியவரிடம் ஒப்படைக்க நினைக்கிறார். அப்போது, ஜெய்க்கு ஏற்கெனவே போன் செய்த நபர் மீண்டும் போன் செய்கிறார். அப்போது, அவரிடம் முகவரியைக் கேட்டு, அங்கு சென்று ஒப்படைக்கப்போகும் ஜெய்யை அந்த நபரின் கூட்டாளிகள் அடித்து துவம்சம் செய்கின்றனர். 

அவர்கள் யார்? ஜெய்யை அவர்கள் தாக்க என்ன காரணம்? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள். 

வழக்கம்போல் ஜெய் வழக்கம்போல் இப்படத்திலும் தனது அப்பாவி முகத்தை படம் முழுக்க பதிவு செய்திருக்கிறார். எல்லா காட்சிகளுக்கும் ஒரேமாதிரியான ரியாக்ஷனை காட்டி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பார்க்க சற்று குண்டாகி அழகாக இருந்தாலும், நடிப்பில் தேறவில்லை. 

நாயகி சுவாதி அழகாக இருந்தாலும், இவருக்கு படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு மிக குறைவாக வழங்கப்பட்டிருப்பது வருத்தமே. 

படத்தின் தலைப்போடு வரும் ஆர்.ஜே. பாலாஜி எப்.எம்.இல் இருக்கும் ஞாபகத்தில் இப்படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால், கேட்கத்தான் முடியவில்லை. படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில், பாலாஜி அடிக்கும் காமெடிக்கு ஜெய், ஜோக்கடிச்சியா? நாளைக்கு சிரிக்கிறேன் என்று சொல்லும் வசனம், இந்த படத்தில் பாலாஜிக்கு சரியாக பொருந்தும். சன்னி லியோன் ஆட்டம் போடும் பாடலும், அந்த பாடலை படமாக்கியவிதம் சரியில்லை.

அதுமட்டுமில்லாமல் படத்தில் நடித்திருக்கும் யாருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லை. எந்த கதாபாத்திரமும் ரசிகர்களை கவரவில்லை. மருத்துவத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட நினைத்த இயக்குனர் சரவணராஜனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஆனால், அதை கதையோட்டத்தில் அழுத்தமாக பதிவு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார். 

விவேக் சிவா- மெர்வின் சாலமோன் ஆகியோர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. வெங்கடேஷ் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இதமாக இருக்கிறது. 

மொத்தத்தில் ‘வடகறி’ சுவையில்லை.
Share this article :

Banner Ads

Friends Site