அண்ணா சாலையில் விழுந்த ரிமோட் ஹெலிகாப்டரால் திடீர் பரபரப்பு  ஏற்பட்டது.சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ஹவுகாத்தி ரயிலில் நேற்று  காலை குண்டு வெடித்தது. இதில், இளம் பெண் ஒருவர் பலியானார். 10க்கும்  மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பரபரப்பான நிலையில், சென்னை அண்ணா  சாலை தேவி தியேட்டர் அருகே உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி அருகே இருந்து  கையடக்க ரிமோட் மூலம் இயங்கக் கூடிய சிறிய வகை ஹெலிகாப்டர் ஒன்று  புறப்பட்டது. சிறிது தூரம் சென்ற அந்த ஹெலிகாப்டர் அருகே இருந்த தாராபூர்  டவர் அருகே அண்ணா சாலையில் கீழே விழுந்தது. இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர்  அதிர்ச்சி அடைந்தனர். தீவிரவாதிகள் ஹெலிகாப்டர் குண்டு வைத்திருக்கலாம்  என்று பதட்டம் ஏற்பட்டது. 
தகவல் அறிந்து சிந்தாதிரிப்பேட்டை  போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், ஹெலிகாப்டரில் குண்டு இல்லை  என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகே பதற்றம் நீங்கியது. இது தொடர்பாக  ஆழ்வார் பேட்டையை சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  அதற்கு பதில் அளித்த அவர் தேவி தியேட்டர் அருகே உள்ள தேவாலயம் ஒன்றில்  நேற்று திருமண நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதை தொழில் நுட்ப முறையில் நவீன  முறையில் ரிமோட் மூலம் இயங்கும் ஹெலி கப்டரில் கேமரா வைத்து திருமண  காட்சிகளை படம் பிடித்து கொண்டு இருந்தோம். பேட்டரி டவுன் ஆனதால்,  ஹெலிகாப்டர் தரை இறங்கி விட்டது என்று கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை  நடந்து வருகிறது.


