தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மு.ப 11 மணிமுதல்  கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று  நடத்தப்பட்டுள்ளது.  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையினில் இடம்பெற்ற இப்போராட்டத்தினில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்ற  உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன்,மற்றும் சிறீதரன் வடமாகாண சபை விவசாய  அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஜனநாயக மக்கள்  முன்னணியின் ஊடக  பேச்சாளர் பாஸ்கரா  சமூக ஆர்வலர் சண் மாஸ்டர்  உள்ளிட்ட  பலர் கலந்து  கொண்டிருந்தனர்.
யுத்தம்  முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்  பெருமளவான நிலங்களும், வீடுகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட  நிலையிலேயே உள்ளன. அவ்வாறு ஆக்கிமிக்கப்பட்டுள்ள காணிகளையும்  வீடுகளையும் நிரந்தரமாக கையகப்படுத்துவதற்கான முயற்சிகளில் இராணுவமும்  அரசும் ஈடுபட்டுவருகின்றன. கிளிநொச்சி நகரிலுள்ள பரவிப்பாஞ்சான்  கிராமத்திலுள்ள பெருமளவு வீடுகள், காணிகள் மற்றும் ஸ்கந்தபுரத்திலுள்ள  கரும்புத்தோட்டக் காணிகள் மற்றும் பொது அமைப்புக்களுக்குச் சொந்தமான  பெருமளவு நிலங்களை கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மேற்படி  நில அபகரிப்பை கண்டித்தும், இராணுவத்தின் பிடியிலுள்ள வீடுகள் நிலங்கள்  பொது மக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் என்றும், இடம்பெயர்ந்த மக்கள்  அவர்களது சொந்த வீடுகளில் மீளக் குடியமர உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும்  என்ற கோரிக்கையை முன்வைத்தும் இக்கவனயீர்ப்புப் போராட்டம்  நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்தினை குழப்பி தடுத்து நிறுத்தும்  நோக்கில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் பொய்க்குற்றச்  சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டமையை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை  செய்யுமாறு வலியுறுத்தியும் போராட்டம் இடம் பெற்றிருந்தது
வலிகாமம் வடக்கு, கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், இரணைத்தீவு, கிளிநொச்சி கரும்புத்தோட்டம், முல்லைத்தீவு, கோப்பாபுலவு உட்பட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் இருந்து வெளியேறக்கோரியும், தமது சொந்த இடங்களில் மக்கள் வாழ வழிவகை செய்யக் கோரியும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கோசங்களை மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களும் எழுப்பினர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பிரதிநிதிகள், த.தே.கூட்டமைப்பின் பா.உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், சி.சிறீதரன் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்களான குருகுலராஜா, ஜங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பெருமளவோனார் கலந்து கொண்டு குரல் எழுப்பியிருந்தனர்.












