போரின் பின்னரும் வன்னியில் ஜனநாயகம் மலர இடமளிக்காத இந்த மஹிந்த அரசு இராணுவ ஆட்சியையே நடத்திவருகின்றது என்பதை இராணுவப் பேச்சாளர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழர் தாயகம் முற்று முழுதாக இராணுவ ஆட்சிக்குள் சிக்குண்டே தற்பொழுதுமுள்ளது. இங்கு அற்ப சொற்பமாகவுள்ள சிவில் நிர்வாகமும் இராணுவ ஆட்சிக்கு உறுதுணை வழங்குவதாகவேயுள்ளது என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினரின் வீடு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதற்கும் அக்கட்சி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இன்று பிற்பகல்  யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பின் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் இல்லை இங்கு நடப்பது முற்று முழுக்க இராணுவ ஆட்சியே என்பதை இராணுவப் பேச்சாளர் ரூவாண் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.  கிளிநொச்சியில் நேற்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ளகருத்துக்கள் இதனை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ள.
இராணுவத்தினரால் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன என்றாலும் அது தொடர்பில் கருத்துக்கூறவும் போராட்டங்கள் தொடர்பில் விமர்சனம் செய்யவும் இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால் இங்கு அப்படியில்லை இராணுவம் தான் எல்லாவற்றும் பதில் கூறுகின்றது. காணிகளை அபகரிப்பதாகயிருந்தாலும் அதனை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தினாலும் இராணுவத் தலையீடுதான் உள்ளது. பாதுகாப்பு தேவைக்காக காணிகளை சுவீகரிப்பதாகயிருந்தாலும் சட்டப்படி பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தான் காணிகளை சுவீகரிக்க முடியும் அப்போது தான் அது சிவில் நிர்வாக நடைமுறைக்குள் வரும் ஆனால் இங்கு அவ்வாறில்லை முற்றுமுழுதாக இராணுவ ஆட்சியே வடக்குட்பட தமிழர்தாயகத்தில் இடம்பெறுகின்றது.  சிவில் நிர்வாகம் இங்கு இல்லை.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்க தமிழ் மக்கள் காணிகளை வழங்கியுள்ளனர் அப்படியென்றால் ஏன் எமக்கு காணிகளை வழங்க முடியாது என்றும் கூறி மக்களின் காணிகளை அபகரிக்கின்றனர். மக்களை தொடர்ந்து அச்ச உணர்வுடன் வாழவைக்கவேண்டும் என்பதிலும் வடக்கில் ஜனநாயகம் மலர விடக்கூடாது என்பதிலும் இராணுவ ஆட்சியை தொடர்ந்து அமுல்படுத்துவதிலும் அரசு உறுதியாகவுள்ளது.
 எனவே தமிழ் மக்களின் விமோசனத்திற்கு எனியாவது சர்வதேச சமூகம் உதவ முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை , இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழ்மக்களுக்கு சொந்தமான காணி அபகரிப்புக்கு எதிராகவும், யுத்த காலத்தில் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுது;தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று  கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தை குழப்பும் வகையில் பல நடவடிக்கைகளை இந்த அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.
இதன் ஒரு கட்டமாக வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினரான சு.பசுபதிப்பிள்ளையின் வீடு கடந்த 28 ஆம் திகதி அதிகாலை 3 மணிமுதல் காலை 9 மணிவரை இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டிருந்ததோடு சோதனை நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
எமது கட்சியின் ஏற்பாட்டில் நேற்று நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியதோடு மக்கள் ஆதரவையும் பெற்றுக்கொடுப்பதில் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை முக்கிய பங்காற்றியிருந்தார்.
இந்நிலையிலேயே அவரது வீட்டினை இராணுவத்தினர் முற்றுகையிட்டு அச்சுறுத்;தியுள்ளனர்.இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்;தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கையினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.அதேவேளை எமது கட்சியின் கிள்pநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரனையும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பரிவு பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். அவரது விடுதலைக்கு சர்வதேச சமூகம் குரல்கொடுக்கவேண்டும் என்பதையும் இவ்விடத்தில் வேண்டுகோளாக முன்வைக்கின்றோம்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மூன்றாவத முறையாகவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட தமிழர்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது என்றால் அதற்கு காரணம் ஜெனிவா அமர்வில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானங்கள் பல வீனமடைந்ததாகவுள்ளதே. எனவே தமிழர் நிலை மேலும் மேலும் மோசமடைந்து செல்கின்றது என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும். யுத்த பாதிப்புக்களை எதிர்கொண்ட மக்களுக்கு விமோசனம் கிடைக்ககூடிய நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


