Headlines News :
Home » » நாளை நிமிர...இன்று எம்மை அழ விடுங்கள்.-இதயச்சந்திரன்

நாளை நிமிர...இன்று எம்மை அழ விடுங்கள்.-இதயச்சந்திரன்




எம்மை நாமே ஆற்றுப்படுத்த,
வேறென்ன வழி!
என்ர அப்புச்சி......
என்ர அம்மா ....
என்ர பிள்ள .....
விபூஷிக்காகளின் மரண ஓலம்.
எதிரொலி எழுப்பவும் மரங்களில்லை.
காணொளிகள் காற்றைக் கிழித்து வந்திறங்கின.
உடல் சிதறி மனிதன் இறப்பதை கண்டிருப்பீர்களா....
கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் சிக்மண்ட் பிரோயடுகளே
நிஜங்களுக்கு என்ன சொல்வீர்!
கனவுகள் துரத்தும் தேசத்திற்குரியவர்களாய் நாம் ஆக்கப்பட்டோமா?
எம் கனவு முழுவதும் சிதைந்த மனித முகங்கள்.
'அன்புடையார் எல்லாம் தமக்குரியர்.....', அது கற்பனைத் தளம்.
குரூர வன்மத்தின் முன்னாள் அறமெல்லாம் கனவுத் தளம்.
சிறிது சிறிதாக நாளங்களை அறுத்தெறிந்து
மரணத்தை சுவைக்கச் சொல்லும் கொடுமை.
ஓடிய இரத்தங்கள் உறைந்து போயின.
மர நிழலில் உறங்கிப்போனது ஒரு உயிர்.
முழங்காலளவு நந்திக்கடலில் அகப்பட்ட இசை.
எல்லாமே முடிந்துவிடும் நிகழ்வின் தொடக்கம்.
கைகள் கட்டப்பட்டு, பிரபஞ்சத்துள் கலந்தது நிர்வாணம்.
இவ்வுலகில், மனிதம் எத்தனை தடவைதான் இறப்பது.
வட்டுவாகலில் ஓர் ஊர்வலம்.
உறவுகளின் உறவுக்கப்பால் நிர்வாண நடை பயணம்.
மனித விழுமியங்களின் ஆடைகள் களையப்பட்டன.
வெட்கப்பட இங்கு யாருமில்லை.
எவருக்கும் வெட்கம் வருவதில்லை.
தன்மானத்திற்கு பண்டமாற்றில்லை.
உடைபட வேண்டியது சுயமரியாதை.
இங்கு யாருக்கும் சுரணை இல்லை.
ஆதலால்,
எம் விதி உணர்ந்து, இன்று எம்மை அழவிடுங்கள்.
நாளை நாமே நிமிர்ந்தெழ வேண்டும்.
அக்கினிக் குஞ்சுகள் காத்திருக்கின்றன.
Share this article :

Banner Ads

Friends Site