Headlines News :
Home » » இந்த மண் எங்களின் சொந்தமண்: எஹியான்

இந்த மண் எங்களின் சொந்தமண்: எஹியான்

முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட தமது சொந்த இடங்களிலேயே முஸ்லிம் மக்கள் குடியேறியுள்ளனரே தவிர, வில்பத்து காட்டுக்குள் எவரும் குடியேறவில்லை என முசலி பிரதேச சபையின் தலைவர் வை.எம்.எஹியான் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஏற்பாட்டில், சர்ச்சைக்குரிய முஸ்லிம் குடியேற்றம் பற்றி அறிந்துகொள்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட 27 கிராமங்கள் இருக்கின்றன. இதில் முதன்மையான நான்கு கிராமங்களாக மறிச்சிக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகியன விளங்குகின்றன. முள்ளிக்குளம் தமிழ் மக்கள் வாழ்கின்ற கிராமமாகும். ஏனைய கிராமங்களில் 90 சதவீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தனர். 

1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர், இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் குடியேறினர். தொடர்ந்தும் புத்தளத்தில் அகதிவாழ்க்கை வாழ விரும்பாமையாலேயே தமது சொந்த இடங்களை சுத்தம் செய்து, அங்கு தற்காலிகமாக குடியேறியுள்ளனர். 

வில்பத்து காடு என்று பிரசாரப்படுத்தப்படும் குறித்த பகுதி முசலி பிரதேசசபைக்குட்பட்ட மரைக்கார்தீவு கிராமமாகும். இங்கு முஸ்லிம் மக்களின் மையவாடி (வெற்றுடல்கள் புகைக்குமிடம்), பள்ளிவாசல், கிணறு என்பன இன்னமும் பழுதடைந்த நிலையில் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இப்படி இருக்கும்போது, தமது சொந்த இடத்தில் குடியேறுபவர்களைப் பார்த்து – காட்டுக்குள் குடியேறுகிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாகவிருக்கிறது.

இங்கு 96 குடும்பங்கள் தற்காலிக ஓலைக் குடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். இவர்களுக்கு 40 ஏக்கர் காணி போதுமானதாகும். இது விடயத்தில் அரசாங்கம் கூடிய கரிசணை காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை, அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு, சிலாவத்துறை, முள்ளிக்குளம் பகுதிகளிலுள்ள 500 ஏக்கர் காணியினை இலங்கை கடற்படை சுபீகரிப்பதற்கு எல்லைக் கல் நாட்டியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்த நடவடிக்கையும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார் எஹியான்.
Share this article :

Banner Ads

Friends Site