பாடசாலையில் இட நெருக்கடி நிலவுவதன் காரணமாக மாணவர்கள் மர நிழலில் ஒதுங்கி கல்வி கற்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.   கிளிநொச்சி பூநகரி ஸ்ரீவிக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களே இத்தகைய இட நெருக்கடியிலும், கற்றல் செற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.   கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது மீள்குடியேற்றம் நடைபெற்ற பகுதியான பூநகரிப் பிரதேசத்தில் உள்ள இந்தப் பாடசாலை கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் தனது சொந்த இடத்தில் செயற்படத் தொடங்கியுள்ள நிலையிலும் மாணவர்களுக்குப் போதுமான வகுப்பறைகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை.   தற்போது இந்தப் பாடசாலையில் 425க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் மிக மோசமான இட நெருக்கடி காணப்படுகிறது. ஒரே ஒரு மாடிக் கட்டடத்தைக் கொண்ட குறித்த பாடசாலையின் மர நிழலின் கீழே அதிக வகுப்புக்கள் நடைபெறுகின்றன.    கிளிநொச்சி மாவட்டத்திலேயே தற்போது மர நிழலின் கீழ் கூடுதலான வகுப்புகள் நடைபெறும் பாடசாலையாகவும் இது விளங்குகின்றது. தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளின் போது சோர்வடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.    அத்துடன் மழை காலத்தில் வகுப்புகள் நடத்தப்பட இயலாது மாணவர்கள் பெரும் இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களோ அல்லது கல்வித்திணைக்களமோ விரைவான நடவடிக்கையை மேற்கொண்டு பாடசாலையின் இட நெருக்கடியை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

.jpg)
.jpg)
