Headlines News :
Home » , » ராஜீவ் கொலை: மத்திய அரசின் மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை: மத்திய அரசின் மனு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 3 பேரின் தூக்கு தண்டனை இரத்துக்கு எதிரான மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, கருணை மனு மீது முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதம் காரணமாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.
அந்த மனுவில், ‘தலைமை நீதிபதி ப.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதி அமர்வு இந்த வழக்கின் தன்மையை பரிசீலிக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து அரசின் அதிகார வரம்புக்குள் நுழைய துணிந்திருக்கிறது.
பெப்ரவரி 18-ம் திகதி பிறப்பித்த இந்த தீர்ப்பு அதற்கான அதிகாரம் இல்லாத 3 நீதிபதி அமர்வால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு, அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சட்டம் சார்ந்த பல்வேறு விளக்கங்கள் தொடர்புடையது என்பதால் 5 நீதிபதி அமர்வு விசாரித்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பு முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது என்றே மரியாதை யுடன் நாங்கள் தெரிவிக்கிறோம். இந்த நீதிமன்றம் வகுத்துள்ளதும் மற்றும் அரசமைப்புச் சட்டம் மற்றும் இதர சட்டங்களில் இடம் பெற்றுள்ளதுமான காலம் காலமாக நடைமுறையில் உள்ள சட்ட கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன.
கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் அதில் தலையிட அதிகாரம் இல்லாத போதும் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 72-வது பிரிவு கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, குடி யரசுத் தலைவர் நிராகரித்து பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதி மன்றம் தலையிட்டது அதன் அதிகாரத் துக்கு அப்பாற்பட்டதாகும்.
குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்துவிட்டால், அந்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு வரம்புக்குட்பட்ட அதிகாரமே இருக்கிறது. கருணை மனுமீது உரிய பரிசீலனை தரப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கருதி இருந்தால் மறு பரிசீலனைக்காக குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். தாமதம் பிரச் சினையாக இருந்திருந்தால், அந்த மனு மீது விரைந்து முடிவு எடுக்கும்படி குடியரசுத் தலை வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம். 3 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து தீர்ப்பு பிறப்பிக்கும்போது மத்திய அரசு வைத்த வாதங்கள் உரிய வகையில் பரிசீலிக்கப்படவில்லை’ என்று அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவு பிறப்பித்தது.
Share this article :

Banner Ads

Friends Site