கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்திலுள்ள முசலம்பிட்டி என்னும்  இடத்திலுள்ள இந்திய வீட்டுத்திட்டத்தில் பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும்  அவரது 13வயது மகள் விபூசிகா பாலேந்திரன் ஆகியோர் வசித்து வந்தனர்.  ஜெயக்குமார் அவர்கள் காணாமல் போன தனது மகனைத் தேடி சகல அதிகாரிகளையும்  சந்தித்துள்ளதோடு, பல ஜனநயாகப் போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார்கள்.
 குறிப்பாக டேவிட்கமரூன் யாழ்ப்பாணம் வந்தபோதும் அவருடன் வந்திருந்த  சர்வதேச ஊடகவியலாளார்கள் அனைவரதும் கவனத்தை காணாமல் போனவர்களது பிரச்சினை  ஈர்க்கக் கூடியளவுக்கு இவர்களது பங்களிப்பு இருந்து. தொடர்ந்தும் காணாமல்  போன தமது பிள்ளையை தேடும் பணியிலும், காணாமல் போனவர்கள் தொடர்பான  விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் ஜெயக்குமாரி  உறுதியாக இருந்துவந்தார். அத்துடன் காணாமல் போன ஏனைய குடும்பத்தவர்களை  ஒருங்கிணைப்பதிலும் முன்னின்று செயற்பட்டு வந்திருந்தார்.
 இவ்வாறான  சூழ்நிலையில் நேற்று பி.ப 3.45 மணியளவில் ஜெயக்குமாரியிடதிருந்து தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளார் செல்வராசா கஜேந்திரனுக்கு  தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதற்கு அவர் பதிலளித்தபோது முதலில்  சிறுமி விபூசிகா பேசியுள்ளார். ”மாமா எங்கள் வீட்டைச்சுற்றி இராணுவம்  குவிந்துள்ளது. எங்களுக்குப் பயமாக இருக்கின்றது. தயவு செய்து எங்களை  காப்பாற்றுங்கள்” என்று பதற்றத்துடன் கேட்டிருக்கின்றார்.
  விபூசிகாவைத் தொடர்ந்து மகளிடமிருந்து தொலைபேசியை வாங்கிய தாயார் தம்பி  எங்கட வீட்டைச் சுற்றி இராணுவம் குவிந்துள்ளது. வீட்டிற்குள்  வரப்போகின்றார்கள் போலுள்ளது என்ர பிள்ளைக்கும் ஏதும் நடந்திடுமோ தெரியாது  தயவு செய்து என்ர பிள்ளையை காப்பாற்றுங்கள் என்று மிகுந்த பற்றத்துடன்  கேட்டதுடன் தொலைபேசியை துண்டித்திருந்தார்.
 உடனடியாக கஜேந்தின்  அவ்விடயத்தினை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு  தெரிவித்ததுடன் அவ்விடயத்தினை உடனடியாக சர்வதேச இராஜதந்திரிகளின்  கவனத்திற்கு கொண்டுவருமாறும் கேட்டிருந்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  உடனடியாக இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளது  இராஜதந்திரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
அத்துடன் கஜேந்திரகுமார்  தகவல் தெரியப்படுத்திய பின்னர் சில தூதரக அதிகாரிகள் தருமபுரத்தில் நின்ற  கஜேந்திரனுடன் தொடர்பை ஏற்படுத்தி நிலமைகள் தொடர்பாக அடிக்கடி அறிந்து  கொண்டிருந்தனர்.
 தொடர்ந்து  பல ஊடகவியலாளார்களுக்கும்  தெரியப்படுத்தியிருந்தார். ஒரு 10 நிமிடங்களுக்குள் மீண்டும் ஜெயக்குமாரி  அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நீங்கள் தற்போது தருமபுரம் வீட்டிலேயேதான்  இருக்கின்றீர்களா என்று கேட்டார். அதற்கு ஆம் என்று பதிலளித்த ஜெயக்குமாரி  அவர்கள் ஐயோ உள்ளுக்கு வாறாங்கள் எங்களை காப்பாற்றுங்கோ. வாறாங்கள்  வாறாங்கள் கட்பண்ணுங்கோ என்று கூறி கட்பண்ணியுள்ளார்.
 அதன் பின்னர்  சில ஊடகவியலாளார்கள் தொடர்புகொண்டபோது ஜெயக்குமாரியின் தொலைபேசியிலிருந்து  பயங்கரவாத புலனாய்வு பிரிவினரே பதிலளித்துள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள்  மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்  தொடர்புகொண்டபோதும் பதிலளித்த பரங்கரவாத புலனாய்வு பிரிவினர்  ஜெயக்குமாரியிடம் தாங்கள் விசாரணை செய்துகொண்டிருப்பதாக கடுந்தொனியில்  கூறியுள்ளனார்.
 கஜேந்திரகுமாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியதும்  கஜேந்திரன் இரண்டு ஊடகவியலாளார்கள் மற்றும் கட்சி உறுப்பினர் ஒருவருடன்  தருமபுரத்திற்கு விரைந்து சென்றார். தருமபுரத்திற்கு சுமார் மாலை  5.45மணியளவில் சென்றடைந்த அவர்கள் முசலம்பிட்டிக்குச் செல்ல முற்பட்டபோது  அங்கு ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கிராமத்திற்கு உள்ளேயும்  வெளியேயும் யாரும் சென்றுவர அனுமதிக்காதிருந்த காரணத்தால் அவர்கள் சம்பவம்  நடைபெற்ற இடத்திற்குச் செல்ல முடியவில்லை.
 இரவு 9.30 மணி வரை தருமபுரம் பாடசாலைக்கு முன்பாக காத்திருந்த பின்னர் ஏமாற்றத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினர்.
 மீண்டும்  குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை  14-03-2014  கஜேந்திரன் சென்றபோது அங்கு ஜெயக்குமாரி வீட்டின் வீதியோரக்  கதவு சங்கிலி மூலம் அடைக்கப்பட்டிருந்தது. கிராமமே வெறிச்சோடிக்  காணப்பட்டுள்ளது.
 அங்கு கிராமத்து மக்களுடன் உரையாடியிருந்தார்  கஜேந்திரன். கிராம மக்களின் தகவலின்படி இராணுவத்தினரும் பொலீசாரும் கூட்டாக  இணைந்து நன்கு திட்டமிட்டு சோடிக்கப்பட்ட பொய்ககுற்றச் சாட்டுக்களை  சுமத்தியே ஜெயக்குமாரியைக் கைது செய்துள்ளனர் என்றே உதியாக கூறுகின்றனார்.
 பாதுகாப்புத் தரப்பினர்  கூறுவது போன்று ஒருவர் பொலீசார் மீது  துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பி ஓடியிருந்தால் அவ்வாறான ஒருவரை   தேடிப்பிடிப்பது போன்ற வகையில் இராணுவத்தினரது செயற்பாடுகள் இருக்கவில்லை  என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனார்.  
 அத்துடன் இராணுவத்தினர்  அங்கு வரும்போது அவர்களது வாகனத்தில் கண்களைக் கட்டி ஒருவரைக்  கொண்டுவந்திருந்ததாகவும், அவரையே தாம் அந்த வீட்டில் வைத்துக் கைது  செய்ததாகவும் இராணுவம் பொய்கூறுவதாகவும் மக்கள் கஜேந்திரனிடம்  கூறியுள்ளனார்.
 ஜெயக்குமாரி அவர்கள் காணாமல் போனவர்களது போராட்டம்  உட்பட தமிழ் மக்களது அனைத்து மனித உரிமைக்கான மற்றும் அரசியல் உரிமைக்கான  போராட்டங்கள் அனைத்தையும் முடங்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில்  திட்டமிட்ட சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை ஜெயக்குமாரி மீது சுமத்தி  அந்த அப்பாவித் தாயாரையும் 13 வயதுச் சிறுமியையும் 6மணித்தியாலங்களுக்கு  மேலாக அவர்களது வீட்டில் அடைத்து வைத்து கடுமையான விசாரணைகளுக்கு  உள்ளாக்கிய பின்னர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனார்.
 விபூசிகா  பருவமடைந்து தற்போதுதான் ஒரு வாரத்தை தாண்டியுள்ளதாகவும், ஈவிரக்கமற்ற  வகையில் அந்தச் சிறுமியையும் கைது செய்து கொண்டு சென்றுள்ளதாகவும் மக்கள்  கூறியுள்ளனர்.


