Headlines News :
Home » , » சீதையின் சிறை மீட்பும் இந்திய மீனவரின் விடுதலையும்

சீதையின் சிறை மீட்பும் இந்திய மீனவரின் விடுதலையும்

இலங்கையை அரக்கர் பூமி என்று வர்ணித்தவர்கள், இந்தியாவை ஞானபூமி என்றனர். இராமபிரான் பரத கண்டத்தவர் என்பதாலும் இராவணன் இலங்கை நாட்டவன் என்பதாலும் அப்படியயாரு புனைப்பு இந்திய தேசத்தவர்களால் புனையப்பட்டது.

சீதையைக் கடத்தியதால் இராவணன் மீது, இந்திய தேசத்திற்கு  தாங்கொணாக் கோபம் இருந்திருக்கும். அதில் நியாயமும் இருக்கவே செய்கின்றது. எதுவாயினும் இராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்காக இராமசேனை இலங்கை மீது போர் தொடுக்க வந்தது.


இலங்கை மீது போர் தொடுக்காமல் அசோக வனத்தில் சிறையிருந்த சீதையை மீட்பதற்கு இராமனுக்கு மாற்று வழிகளும் இருந்தன. அதில் ஒருவழி இராம பக்தனாகிய அனுமன் மூலமாக சீதையை மீட்டிருக்க முடியும். ஆனால் அதனை இராமபிரான் விரும்பவில்லை.

தன் வீரத்திறத்தின் ஊடாகவே சீதையை மீட்க வேண்டுமென்று இராமர் நினைத்தார். அதனை அவர் நிரூபித்தும் காட்டினார். 

விடுதலை என்பது இரந்து கேட்பதாக இருக்கக் கூடாது. அது நேர்மையான- வீரமான- தர்மமான வாழ்வுக்கு இழுக்கு. எனவே கைது, கடத்தல் என்பவற்றின் தன்மைக்கு ஏற்ப விடுதலை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதுவே உத்தமருக்கு அழகு. இதன் காரணமாகவே, தன் வில்திறத்தால் சீதையை மீட்டார் இராமர்.

இதற்கு அப்பால் இராமர், சூர்ப்பனகைக்கு மெல்லிய சாடை காட்டியிருந்தாலே போதும். சீதையை கூட்டி வந்து இராமர் முன் விட்டிருப்பாள் சூர்ப்பனகை.

இத்தகைய விடுதலையயல்லாம் விடுதலையல்ல என்ற அறத்தை ஸ்ரீராமமூர்த்தி அரக்கர் பூமியாகிய இலங்கைக்கும் தான் பிறந்த ஞான பூமியாகிய பாரத தேசத்திற்கும் தன் வாழ்வின் ஊடாகப் போதித்தார். ஆனால் இராமர் பூமியோ விடுதலையை எப்படியும் அடையலாம் என நிரூபித்துக் காட்டிவிட்டது. 

ஆம், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்துக் கருத்துரைத்தும், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கியும் இருந்ததன் ஊடாக ஞானபூமி என்ற பெருமைக்கு இந்திய மத்திய அரசு களங்கம் ஏற்படுத்திற்று.

ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டு; இந்திய மீனவர்களுக்கு விடுதலை கிடைக்கச் செய்ததாக இந்தியா கூறுவதிலிருந்து இராமர் பூமி அரக்கர் பூமியை விட பன்மடங்கு கீழ்நிலைப்பட்டு விட்டது எனலாம்.

அட! இந்தக் காலத்தில் சீதை கடத்தப்பட்டிருந்தால் இந்திய மத்திய அரசு என்ன செய்திருக்கும் என்று கூற நாக்கூசுவதால் அதனை அப்படியே விட்டுவிடுகின்றோம். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
Share this article :

Banner Ads

Friends Site