இலங்கையின் போர்க் குற்றங்களோடு நேரடித் தொடர்பு கொண்டவர் இவர்! மு.வே.யோகேஸ்வரன் தன்வினை தன்னைச் சுடும்..ஓட்டப்பம் வீட்டைச் சுடும்’ என்று பட்டினத்தார் நீண்ட காலத்துக்கு முன்னரே யதார்த்தமாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்..ஆம்; அது எத்தனை தூரம் உண்மை?
கடந்த ஆண்டு நவம்பரில் பாதுகாப்பு அமைச்சின் ஊடக பிரிவின் தலைமை அதிகாரியும்,கோத்தபயாவின் இனப்படுகொலைகளை மிகத் துல்லியமாக அறிந்தவரும்,அவைகளோடு நேரடியாகச் சம்பந்தப் பட்டவருமான,லக்ஷ்மன் கலுகல்ல என்ற உயர் அதிகாரியை ,ஜனாதிபதி ராஜபக்சா ஏதோ காரணத்துக்காக சில மாதங்களுக்கு முன்னர் பதவி நீக்கம் செய்தார் என்பது நமக்கு இன்று தெரிந்த விடயம்.ஆனால்,இப்போது அது ஏன் என்று வெளிவரத் தொடங்கிவிட்டது. அதுவே, இலங்கை அரசுக்கு மிகப் பெரிய தலைவலியை எதிர்வரும் மார்ச் மாதத்தில், ஜெனிவா மனித உரிமை அமைப்பில் கொடுக்கப் போகிறது என்பதைக் கேட்க அன்பர்கள் பலருக்கும் மகிழ்வாக இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
கொழும்பில் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கில செய்தி ஏட்டில் இதுபற்றிய ஓர் அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.லக்ஷ்மன் கலுகல்ல அவர்கள், வன்னிப்போரின்போது பாதுகாப்பு அமைச்சில், அதுவும் மிக அந்தரங்க ராணுவ ஊடகச் செய்திகளை கோதபயாவுக்கு அவ்வப்போது பகிர்ந்து கொண்டவர்.வன்னிப் போரின்போது ஓர் ஊசி நிலத்தில் விழுந்தால்கூட அது அவருக்கு தெரியாமல் விழ வாய்ப்பில்லை என்னும் இடத்தில் இருந்த ஓர் முக்கிய நபர்.கடந்த நவம்பரில் கொழும்பில் உள்ள,சில ஐரோப்பிய தூதரகங்களின் உயர் அதிகாரிகளோடு வன்னிப் போர்க் குற்ற தகவல்களை பகிந்து கொண்டார் என்ற குற்றச் சாட்டில்தான் இவர் அந்த பதவியில் இருந்து ராஜபக்சாவால் அதிரடியாக நீக்கப் பட்டிருக்கவேண்டும் என்ற தகவல் இப்போது அம்பலத்துக்கு வந்துவிட்டது.
அதுமட்டுமன்றி,எதிர்வரும் மார்ச்சில் இவரால் சில(பிரிட்டனும் அதில் ஒன்றாக இருக்கலாம்) ஐரோப்பிய நாடுகளுக்கு மிகத் துல்லியமாக , முள்ளி வாய்க்கால் பற்றிய-இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய, ஆதாரங்கள் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.குறிப்பாக,தலைவரின் மகன் பாலச் சந்திரன் படுகொலை,இசைப்பிரியாவின் கோரபடுகொலை ,பாலியல் வன்முறை,போன்றவைகள் அடங்கும்.அதுமட்டுமன்றி, காணாமல் போனதாக கருதப்படும் அநேக புலிகளின் உறுப்பினர்கள்,சிறையில் உள்ளதாகச் சொல்லப் பட்ட அநேக உறுப்பினர்களை ஈவு இரக்கமற்று இலங்கை ராணுவம் கொன்று குவித்த வரலாறுகள் இவரால் அம்பலப் படுத்தப் பட்டிருக்க கூடும்.
ஏன் தெரியுமா? அந்தக் காலப் பகுதியில் இவரிடம் சிக்காத எந்தப் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட செய்திகளும் இல்லை என்பதுதான் உண்மை! லக்ஷ்மன் கலுகல்ல ஜெனிவா செல்லவுள்ளதாக தெரிகிறது. அவரைத் தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டால்,அவருக்காக குரல் கொடுக்க சில ஐரோப்பிய நாடுகள் உள்ளன என்பதால்தான் ராஜபக்சாவால் இப்போது-இன்றைய நிலையில், எதுவும் செய்ய முடியாது!..குறிப்பாக ராஜபக்சா அவர்கள் ஆப்பிழுத்த குரங்கின்’ நிலையிலேயே இப்போது உள்ளார்.அதனால்தான்போலும் அடிக்கடி அவர் மின்சாரக் கதிரை’ பற்றிய கனவுகளில் மூழ்கிவிடுகிறார்?


