சனல் 4 தொலைக்காட்சியினால் அம்பலப்படுத்தப்பட்ட போர்க்குற்றச் சாட்சியப்படத்தில் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையினிலுள்ள விடுதலைப்புலிகள் போராளிகளுள் மேலுமொருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையினைச் சொந்த இடமாகக்கொண்ட பேரம்பலநாதர் பிரதீபன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுவாகல் – முள்ளிவாய்க்காலில் 2009 ம் ஆண்டின் மே 18 ம் திகதி கடைசியாக அவரை சிலர் கண்டதாக தெரிவித்தனர்.
காணாமல் போயிருந்த வேளை அவரிற்கு 30 வயதாகும். சுமார் நான்கரை வருட இடைவெளியின் பின்னதாக அவரது சகோதரி சனல் -4 வெளியிட்ட புகைப்படத்தின் அடிப்படையினில் தனது சகோதரனை அடையாளம் காட்டியுள்ளார்.
சனல் 4 போரின் பின்னராக முதலாவதாக 2010 மே 20 ம் திகதி வெளிக்கொணர்ந்த போர்க்குற்றசாட்சியமான குறித்த படத்தினில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையினில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த விடுதலைப்புலிகள் போராளிகள் பற்றி இன்று வரை தகவல்கள் இல்லாதேயுள்ளது.
அதில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகள் பற்றி படிப்படியாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையினிலேயே குறித்த மற்றொரு போராளி பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தனது சகோதரன் பற்றியும் மே 18 2009 இன் பின்னராக இன்று வரை தகவல்கள் கிட்டியிருக்கவில்லையென சகோதரி தெரிவிக்கின்றார்.


